முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்களின் ரூ.110 கோடியை முடக்கி வைக்க நீதிமன்றம் உத்தரவு

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. அவர் தனது பதவி காலத்தில் தனக்கு வேண்டப்பட்டவர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சி பகுதிகளில் முறைகேடாக தனக்கு நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் செய்யப்பட்டது. அதில் எஸ்.பி.வேலுமணி தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி விதிகளுக்கு முரணாகவும், அதிகாரத்தை பயன்படுத்தியதாகவும் அதன்மூலம் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் உள்பட 63 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களான கே.சி.பி. இன்ப்ரா லிமிடெட் மற்றும் ஆலம் கோல்டு டைமண்ட் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் வங்கி டெபாசிட் தொகை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த பணம் வந்தது தொடர்பாகவும், பல்வேறு நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது இந்த 2 நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் ரூ.100 கோடிக்கு மேல் பணம் வைப்புத்தொகை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த தொகையை முடக்குவதற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதை அறிந்ததும் இரண்டு நிறுவனங்களும் தங்களது வங்கி கணக்கில் உள்ள வைப்புத்தொகையை முடக்கக்கூடாது என எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கடந்த 2017-ம் ஆண்டு 2 நிறுவனங்களின் வங்கி கணக்குகளிலும் முறைகேடாக பணம் செலுத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பான விவரங்கள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்து இருந்தனர். இவை எல்லாம் கோர்ட்டில் ஆய்வு செய்யப்பட்டது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களின் போது 2 நிறுவனங்களுக்கும் முறைகேடாக பணம் கிடைத்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவைகளை முடக்க முயற்சி மேற்கொண்டிருந்தனர்.

அந்த வகையில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் 2 நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.110 கோடி டெ சிட் தொகையை முடக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நீதிபதி ஜே.ஓம்பிரகாஷ் விசாரித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் கோரிக்கையை ஏற்று எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களின் ரூ.110 கோடி வங்கி டெபாசிட் தொகையை முடக்கம் செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட அவருக்கு நெருக்கமான இடங்கள் உள்பட 63 இடங்களில் சோதனைகள் நடைபெற்று 5 மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமானவர்களின் ரூ.110 கோடி பணத்தை சிறப்பு கோர்ட்டு முடக்கி வைத்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் எஸ்.பி.வேலுமணி வழக்கில் கோர்ட்டு எடுத்துள்ள நடவடிக்கை அடுத்தகட்ட எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமாக இருந்த அனைவரது வங்கி கணக்குகள், சொத்து விவரங்கள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

இதையடுத்து தற்போது முடக்கப்பட்டுள்ளது போன்று எந்த நேரத்திலும் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான, மற்றவர்களின் பணம் மற்றும் சொத்துக்கள் முடக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.