Tamilசெய்திகள்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட 53 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தி.மு.க. சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக தமிழக கவர்னரை சந்தித்தும் தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த முறைகேடுகள் பற்றி உரிய விசாரணை நடத்தப்படும் என்று ஏற்கனவே தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது இதுபோன்று மேலும் பல முன்னாள் அமைச்சர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்பட 53 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ். பி.வேலுமணி தனது பதவியை தவறாக பயன்படுத்தி தனக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு சலுகை அடிப்படையில் டெண்டர் வழங்கியதாக புகார் கூறப்பட்டு இருந்தது.

அந்த அடிப்படையிலேயே இன்று கோவை மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் “சி புரோஸ்” என்ற பெயரில் பிரபலமான சொகுசு வசதிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. இங்கு எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான வீடு இருக்கிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலர் வசிக்கும் இந்த குடியிருப்பில் மிகவும் வசதி படைத்தவர்களே உள்ளனர்.

இந்த குடியிருப்பில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.

கோடம்பாக்கம் ரங்கராஜன் தெருவில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் உறவினர் ஒருவர் வீடு, முகப்பேர் நேதாஜி தெருவில் வசித்து வரும் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் வீடு, ஆழ்வார்பேட்டை ஆனந்தா தெருவில் உள்ள உறவினர் வீடு, தேனாம்பேட்டை பகுதியில் உள்ள நண்பர் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

இதே போன்று சென்னையில் மேலும் பல்வேறு இடங்களிலும் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 16 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சேப்பாக்கத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக அடுக்குமாடிகளை கொண்ட விடுதி கட்டப்பட்டது. அந்த விடுதியில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்குள்ள ‘டி’பிளாக்கில் எஸ்.பி.வேலுமணிக்கு தனி அறை உள்ளது.

இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சென்றும் சோதனை நடத்தினார்கள். டி.எஸ்.பி. ராமதாஸ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

அடையாறில் உள்ள சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார், அபிராமபுரத்தில் வசித்து வரும் வேலுமணியின் ஆடிட்டர் சலீம், அரும்பாக்கத்தில் அவருக்கு நெருக்கமானவரான கிருஷ்ண சாமி, வேளச்சேரியில் உறவினர் சந்திரசேகர், வில்லிவாக்கத்தில் இன்னொரு தலைமை பொறியாளரான புகழேந்தி உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டன.

மாதவரம் பால் பண்ணை அருகில் உள்ள பேங்க் காலனியில் கட்டுமான நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டுக்கு இன்று காலை 7.05 மணியளவில் லஞ்ச ஒழிப்பு கூடுதல் டி.எஸ்.பி திவ்யா தலைமையில் அதிகாரிகள் சென்றனர். வீட்டிற்குள் சென்றதும் வீட்டின் கதவை உள்பக்கமாக மூடிக்கொண்டனர். வீட்டில் இருந்த யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை.

வீடு முழுவதும் அங்குலம், அங்குலமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

தொண்டாமுத்தூரில் உள்ள பண்ணை வீடு, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அலுவலகம் ஆகியவற்றிலும் சோதனை நடந்தது.

கோவைப்புதூரில் உள்ள அவரது சகோதரர் அன்பரசன் வீடு மற்றும் அவர் நடத்தி வரும் அறக்கட்டளை, நிறுவனத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதப்படும் வடவள்ளி மகாராணி அவென்யூவில் வசித்து வரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும் என்ஜினீயருமான சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

வீட்டின் அருகே அவர் நடத்தி வரும் அறக்கட்டளை நிறுவனத்திலும் சோதனை நடந்தது.

சந்திரசேகருக்கு சொந்தமான குளத்துப்பாளையத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மதுக்கரை நகர செயலாளர் சண்முகராஜா வீடு மற்றும் புலியகுளத்தில் உள்ள கே.சி.பி அலுவலகம் மற்றும் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய உறவினர்கள், அவருடன் தொடர்பில் இருந்த அரசு அதிகாரிகளின் வீடுகள் உள்பட பல இடங்களில் இன்று காலை 7 மணியில் இருந்து சோதனை நடைபெற்று வருகிறது.

கோவையில் மட்டும் இன்று ஒரே நேரத்தில் 35 இடங்களில் சோதனை நடை பெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை அருகில் உள்ள சின்னக்காம்பட்டியில் வேலுமணியின் நெருங்கிய உறவினரான மதுராந்தகி என்பவர் வசித்து வருகிறார்.

சப்-கலெக்டராக பணிபுரிந்து வரும் இவர் எஸ்.பி. வேலுமணியின் உறவினர் ஆவார். இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதே போன்று காஞ்சிபுரத்திலும் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஒருவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது உள்ளாட்சித் துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் ஆகியோர் 2018-ம் ஆண்டு புகார் அளித்து இருந்தனர்.

இந்த புகாரின் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து இந்த சோதனையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கியுள்ள 2-வது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆவார். ஏற்கனவே எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் எஸ்.பி.வேலுமணி வீட்டிலும் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்பு சோதனை அரசியல் அரங்கத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.