Tamilசெய்திகள்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் வாழ்த்து!

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

உலகெங்கும் வாழும் தமிழர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தை திங்கள் முதல் நாளான பொங்கல் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில் வண்ணக் கோலங்களிட்டு, மஞ்சள், கரும்பு, இஞ்சி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை படையலிட்டு, புதுப்பானையில் புது அரிசியிட்டு, அவ்வரிசி பொங்கும்போது, “பொங்கலோ, பொங்கல்” என்று மங்கல ஒலி எழுப்பி, இறைவனை வணங்கி, பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள். பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டு மக்கள் இன்புற்று கொண்டாடிட குடும்ப அட்டைதாரர்களுக்கு அம்மாவின் அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் ரொக்கமும் வழங்கி சிறப்பித்துள்ளது.

விவசாய பெருங்குடி மக்களின் நலனைக் காத்திடும் வகையில் அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, விவசாயிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழி வகுக்கும் உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகளை ஏற்படுத்துதல், கூட்டுப் பண்ணையத் திட்டத்தில் சிறப்பாக செயல்படும் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குதல், மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, மண் பரிசோதனை அடிப்படையில் உரங்கள் இடுவதற்காக மண்வள அட்டைகளை விவசாயிகளுக்கு வழங்குதல், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் கட்டுதல், சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு, மண் வளத்தினை பேணிப் பாதுகாத்து, மகசூலை பெருக்கும் மலிவு விலை உயிர் உரமான “அம்மா உயிர் உரங்கள்” வழங்குதல், விவசாயிகளுக்கு வேளாண் தொடர்பான அனைத்து தகவல்களையும் அளிக்கும் உழவன் கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியது.

விவசாயத்திற்கு தேவையான நீர்வள ஆதாரங்களை தூர்வாரி மேம்படுத்திட குடிமராமத்து திட்டம், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் தூர்வாரும் போது கிடைக்கும் வண்டல் மண்ணை இயற்கை உரமாக பயன்படுத்திட விவசாயிகள் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி, விவசாயிகளுக்கு மானிய விலையில் நுண்ணீர்ப் பாசனக் கருவிகள் வழங்குதல், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை வாயிலாக விவசாயிகளுக்கு தரமான சான்றுபெற்ற விதைகள் வழங்குதல் போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்களை விவசாயப் பெருமக்களின் நல்வாழ்விற்காக செயல்படுத்தி வருகிறது.

இப்பொங்கல் திருநாளில், தமிழர்களின் வாழ்வில் நலமும் வளமும் பெருகி, அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று வாழ்த்தி, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது பொங்கல் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *