முதலீட்டார்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி

துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி நேற்று தொடங்கியது. அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை தொடர்ச்சியாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. அமீரகம், இந்தியா உள்பட 192 நாடுகள் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு நாடுகளும் பிரத்யேக அரங்கங்கள் அமைத்துள்ளது. தொழில்நுட்பங்கள், கலை, இசை மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் என சிறப்பம்சங்களுடன் தினமும் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.

இந்தியா அமைத்துள்ள அரங்கில் கூடியிருந்தவர்களின் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசினார். அப்போது ‘‘வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற நாடாக இந்தியா விளங்குவதுடன் அதிகபட்ச வளர்ச்சியையும் அளிக்கிறது. இங்கு முதலீடுகள் செய்ய அனைவரையும் திறந்த மனதுடன் வரவேற்கிறோம்.

இந்தியாவில் முதலீடு செய்வதன் வாயிலாக எங்கள் வளர்ச்சியில் நீங்களும் இணைய அழைக்கிறோம். இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என நான் ஏன் அழைக்கிறேன் என்றால், இந்தியா வாய்ப்புகளுக்கான நிலமாக விளங்குகிறது. கலை, வணிகம் தொழில் அல்லது கல்வித்துறையாக இருந்தாலும் சரி. கண்டுபிடிப்புக்கான  வாய்ப்பு, கூட்டாளருக்கான வாய்ப்பு, முன்னேறுவதற்கான வாய்ப்பு உள்ளது’’ என முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.