முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! – ஒரே நாளில் நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகள்

மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நேற்று முன்தினம் நடந்த கிராம சபை கூட்டத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு பெண்கள், உசிலம்பட்டிக்கு இலவசமாக செல்கிறோம். பாப்பாபட்டியில் இருந்து மதுரைக்கு இலவச பஸ் வசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

உடனே முதல்-அமைச்சர் பெண்கள் இனி பாப்பாபட்டியில் இருந்து மதுரைக்கு இலவசமாக அரசு பஸ்களில் செல்லலாம் என்றார். அதன் பின் இதுகுறித்து அதிகாரிகளுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த உத்தரவை தொடர்ந்து உடனடியாக மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் அனைத்து பஸ்களும் சாதாரண கட்டண பஸ்களாக மாற்றப்பட்டு பெண்களுக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மதுரை மண்டல அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் திருவம்பலம் பிள்ளை, பொதுமேலாளர் இளங்கோவன் ஆகியோர் கூறியதாவது:-

பாப்பாபட்டி கிராமத்தில் இருந்து உசிலம்பட்டி மற்றும் பெரியார் பஸ் நிலையத்திற்கு அரசு பஸ்கள் செல்கிறது. அதில் உசிலம்பட்டிக்கு 13 பஸ்கள் என மொத்தம் 28 நடைகள் செல்கிறது. அந்த பஸ்கள் அனைத்தும் சாதாரண கட்டண பஸ்கள். எனவே அதில் பெண்கள் அனைவரும் இலவசமாக பயணம் செய்து வந்தனர்.

அதேபோல் பெரியார் பஸ் நிலையத்திற்கு 3 பஸ்கள் 10 நடைகள் செல்கிறது. அதில் ஒரு பஸ் மட்டும் தான் சாதாரண கட்டண பஸ். எனவே அதில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வந்தனர்.

முதல்-அமைச்சர் உத்தரவை தொடர்ந்து உடனடியாக பாப்பாபட்டியில் இருந்து பெரியார் பஸ் நிலையத்திற்கு இயக்கப்பட்ட அனைத்து அரசு பஸ்களும் சாதாரண கட்டண பஸ்களாக மாற்றப்பட்டுவிட்டன. பெண்கள் இதில் இலவசமாக பயணம் செய்யலாம் என்றனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட ஒரே நாளில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த கிராம பெண்கள் கூறுகையில், நாங்கள் மதுரைக்கு வேலைக்கு செல்ல மாதம் ரூ.1500 முதல் 2 ஆயிரம் வரை செலவானது. தற்போது சாதாரண கட்டண பஸ் இயக்கப்படுவதால் பெண்கள் இலவசமாகவும், ஆண்கள் குறைந்த கட்டணத்திலும் பயணம் செய்யலாம். இதனால் எங்களுக்கு செலவுகள் குறையும். எங்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என மகிழ்ச்சியுடன் கூறினர்.