மீண்டும் உயரத்தொடங்கிய தக்காளி விலை – கோயம்பேட்டில் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை
தென்மேற்கு பருவமழை ஒரே நேரத்தில பல மாநிலங்களில் தொடங்கி கனமழை பெய்தது. இதனால் தக்காளி சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த வாரம் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விலை படிப்படியாக குறைந்தது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரத்து அதிகரித்ததால் நேற்று முன்தினம் (ஜூன் 29-ந்தேதி வியாழக்கிழமை) தக்காளி விலை 50 ரூபாயாக குறைந்தது. ஆனால், நேற்று அதிகரித்து 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று 15 ரூபாய் அதிகரித்து 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இரண்டு நாட்களில் கிடுகிடுவென உயர்ந்து மீண்டும் 100 ரூபாயை தொடும் நிலை ஏற்பட்டுள்ளது. சில்லறையில் 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வண்டிகள் வரத்து குறைவே விலை அதிகரிப்புக்கு காரணம் என சொல்லப்படுகிறது.
வழக்கமாக சுமார் 40 வண்டிகளுக்கு மேல் வரும் நிலையில் இன்று 30 வண்டிகள் மட்டுமே வந்ததால் 15 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும், மற்ற காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளது. இஞ்சி 190 ரூபாய்க்கும், பூண்டு 130 ரூபாய்க்கும், பீன்ஸ் 110 ரூபாய்க்கும், பாகற்காய் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.