Tamilசெய்திகள்

மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

ஊரடங்கு காலத்தில் முந்தைய மின் கட்டண தொகை அடிப்படையில் புதிய கட்டணம் நிர்ணயிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் எம்.எல். ரவி வழக்கு தொடர்ந்தார். ஊரடங்கு காலத்தில் 4 மாதங்களுக்கு சேர்த்து மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக மனுதாரர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின் போது அதிக மின் கட்டணத்தை மின் வாரியம் வசூலிக்கவில்லை என்றும் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்ததால் மின் கட்டணம் அதிகமாக இருக்கும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்தது.

புதிதாக மின் கணக்கீடு செய்யப்படும்போது ஏற்கெனவே செலுத்திய தொகையை கழித்துக்கொண்டு புதிதாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த விதிமீறலோ, தவறோ இல்லை என தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அப்போது மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்று நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

தனிப்பட்ட நபர்களுக்கு குறைகள் இருப்பின் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *