மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை கடைசி நாள்

தமிழகத்தில் மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து மின் இணைப்பு உள்ளவர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 2 கோடியே 67 லட்சம் மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் இதுவரை 2 கோடியே 34 லட்சம் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்துள்ளனர். இதை அமைச்சர் செந்தில்பாலாஜி டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

இதுவரை இணைத்திடாதவர்கள் விரைந்து இணைத்திட வேண்டும் என்றும் அதில் கூறி உள்ளார். ஆதார் எண்ணை இணைக்க நாளை கடைசி நாள் என்பதால் அதற்கு மேல் கால அவகாசம் வழங்கப்படுமா? என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதுபற்றி மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், “அனைவரும் பயன்பெறும் வகையில் ஆதார் இணைப்பு கால அவகாசத்தை மேலும் 15 நாட்கள் நீட்டிக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தனர்.