மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டியது – அதிகாரிகள் தகவல்

சென்னை மாநகராட்சி மூலம் மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. மொத்தம் 281 பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்கள் படித்து வருகிறார்கள். கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்தவர்கள் தனியார் பள்ளிகளில் படித்த தங்கள் குழந்தைகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்தனர்.

கல்வி கட்டணம் எதுவும் இல்லாதது மட்டுமின்றி பாடப்புத்தகம், நோட்டு-புத்தகம், சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் மாணவ-மாணவிகளுக்கு அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளில் அரசு, மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 8 லட்சம் வரை உயர்ந்தது. சென்னையில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 11 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்தனர்.

இந்த நிலையில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மாநகராட்சி பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன.கடந்த 20 நாட்களில் 1 லட்சத்து 5 ஆயிரம் பேர் மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்து இருப்பதாக கல்வித் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த ஆண்டை போலவே மாணவர் சேர்க்கை உயரும் என்று எதிர்பார்க்கிறோம். இது வரையில் 1.5 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். செப்டம்பர் மாதம் விஜயதசமி வரை மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அதனால் கடந்த வருடத்தை போல மாணவர்கள் எண்ணிக்கை உயரும்.

கல்வித்துறை சார்பில் அனைத்து மாநகராட்சி பள்ளிகள் முன்பும் பேனர் வைத்துள்ளோம். இதுதவிர நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டு வீடு வீடாக வழங்கப்படுகிறது. மாநகராட்சி பள்ளியில் உள்ள வசதிகள், தரம், அரசு வழங்கும் கல்வி உபகரணங்கள் குறித்து பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

மேலும் தற்போது பள்ளிகளில் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு இருப்பதால் அதில் உள்ள உறுப்பினர்கள் மூலம் கூடுதலாக மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது. பள்ளிகள் உள்ள பகுதிகளில் ஆசிரியர்கள் துண்டு பிரசுரம் வழங்கி மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.