மாணவர்கள் மீது தாக்குதல் – திருமாவளவன், வைகோ எதிர்ப்பு

புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்துப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த செமஸ்டர் தேர்வுக்கான பதிவு தொடங்கியதால், கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பொங்கி எழுந்துள்ள ஜே.என்.யூ. மாணவர்கள், அறப்போராட்டங்களை நடத்த முனைந்தபோது, காவல்துறை அத்துமீறி பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. குண்டர்களும், காக்கிச் சட்டைகளுடன் சேர்ந்து கொண்டு மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கினர்.

ஜே.என்.யூ. மாணவர் சங்கத்தைச் சேர்ந்த சதீஷ் சந்திர யாதவ் நேற்று மதவாத வெறிகொண்ட வன்முறையாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து மாணவர்கள் கண்டனப் பேரணி நடத்தினர். பா.ஜ.க. மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. குண்டர்கள் பெரிய பெரிய கற்கள், உருட்டுக்கட்டைகள், இரும்புத் தடிகள் கொண்டு பேரணியில் வந்த மாணவர்களை தாக்கி இருக்கிறார்கள். படுகாயம் அடைந்த 18 மாணவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்த ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் ஒய்ஷி கோஷ் உயிருக்குப் போராடி வருகிறார்.

பல்கலைக்கழகத்தில் நுழைந்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவ சனாதன கூட்டத்தின் வன்முறைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஜே.என்.யூ. மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஏ.பி.வி.பி. குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:-

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்துக்குள் துணைவேந்தர் மற்றும் போலீசாரின் அனுமதியோடு ஆதரவோடு நுழைந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள் கம்பிகளால் கற்களால் தாக்கி உள்ளனர்.

இதில் மாணவர் தலைவர் உட்பட 26 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கரவாதச் செயலுக்கு காரணமான ஏ.பி.வி.பி. குண்டர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

அவர்களை பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதித்து ஊக்குவித்த துணைவேந்தர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அதற்கு உடந்தையாக இருந்த காவல் துறைக்குப் பொறுப்பான உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த வன்முறைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

திடீரென உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணங்களை திரும்பப் பெறவேண்டும் என்று கடந்த சுமார் மூன்று மாதங்களாக அமைதியான முறையில் பல்கலைக்கழக மாணவர்கள் போராடிக் கொண்டுள்ளனர். நேற்றிரவு அங்கே நுழைந்த ஏபிவிபி குண்டர்கள் மாணவர்களையும் மாணவர் தலைவரையும் பேராசிரியர்களையும் குறிவைத்து தாக்கியுள்ளனர்.

அவர்களது வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்ட செய்திகளை ஆதாரமாகக் கொண்டு இந்த தாக்குதல் முன்பே திட்டமிடப்பட்டது என்பதை ஆங்கில நாளேடு அம்பலப்படுத்தி இருக்கிறது. அதில் ஈடுபட்டவர்களுடைய தொலைபேசி எண்களும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் இதுவரை டெல்லி காவல் துறைக்கு பொறுப்பான உள்துறை அமைச்சகத்தால் எந்த ஒரு நடவடிக்கையும் வன்முறையாளர்கள் மீது எடுக்கப்படவில்லை.

ஏ.பி.வி.பி.யின் திட்டமிட்ட இந்த வன்முறை அது ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதை மெய்ப்பிக்கிறது. எனவே ஜே.என். யூ. வளாகத்திலும் இந்தியா முழுவதும் உள்ள கல்வி வளாகங்களிலும் ஏ.பி.வி.பி. அமைப்பின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ஜே.என்.யூ. என்பது ஒரு பல்கலைக்கழகம் மட்டுமல்ல இந்தியாவின் அறிவுப்பாரம்பரியத்தின் அடையாளம். இன்றைய ஆட்சியாளர்கள் அதிகாரிகள் பெரும்பாலோர் அந்த பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் தான். அத்தகைய பெருமை வாய்ந்த பல் கலைக்கழகத்தை சின்னா பின்னமாக்கும் விதமான வன்முறை அதிர்ச்சியளிக்கிறது.

அங்கு மட்டுமல்ல இந்தியாவின் கல்வி மையங்கள் எல்லாவற்றையுமே தமது பிடிக்குள் கொண்டு வரும் நோக்கோடு ஏ.பி.வி.பி. எனும் பயங்கரவாத அமைப்பை இந்துத்துவ சக்திகள் பயன்படுத்துகின்றனர். இது இந்தியாவின் எதிர்காலத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியதாகும்.

இந்த வன்முறையைக் கண்டிப்பதோடு அதில் ஈடுபட்ட குண்டர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும்; அதற்கு உடந்தையாக இருந்த துணைவேந்தரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும்; வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டபோது வேடிக்கை பார்த்துக்கொண்டு அதற்கு ஊக்கமளித்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலைக் கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *