மழையால் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானாவுக்கு தெலுங்கு நடிகர்கள் நிதி

தெலுங்கானாவில் கொட்டித்தீர்த்த கனமழை, வெள்ளம் காரணமாக 5000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார். பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக உடனடியாக ரூ 1,350 கோடி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மழை, வெள்ளம், அதனால் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக தெலங்கானாவில் மட்டும் 70 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள தெலுங்கானாவுக்கு நடிகர் சிரஞ்சீவி ரூ.1 கோடியை தெலுங்கானா முதலமைச்சர் நிவாரணத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளார். அதுபோல் மகேஷ் பாபு ரூ.1 கோடியும், ஜூனியர் என்.டி.ஆர். ரூ.50 லட்சமும், விஜய் தேவரகொண்டா ரூ.10 லட்சமும் நிவாரண நிதியுதவியாக வழங்கி இருக்கிறார்கள். மேலும் பலர் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.