மலையாள இயக்குநர் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய கமல்ஹாசன்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசன், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை காரைக்குடியில் நடத்த உள்ளனர்.

விக்ரம் படத்தில் நடித்து முடித்ததும் ‘இந்தியன் 2’ படத்தின் எஞ்சியுள்ள காட்சிகளில் நடிக்க உள்ளார் கமல். ஷங்கர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், விக்ரம், இந்தியன் 2 படங்களில் நடித்து முடித்த பின்னர், பிரபல மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதை சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார் கமல்ஹாசன். மகேஷ் நாராயணன் இயக்க உள்ள மலையாள படத்துக்கு கமல்ஹாசன் திரைக்கதை அமைக்க உள்ளாராம். சமீபத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மாலிக் என்கிற மலையாள படத்தை மகேஷ் நாராயணன் தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.