Tamilவிளையாட்டு

மற்றவர்களை போல எனக்கும் கோபம் வரும் – டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் 38 வயதான டோனி, தானாகவே முன்வந்து ஓய்வு கேட்டு இருப்பதால் வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்க தொடரில் இடம்பெறவில்லை. அவர் தொடர்ந்து விளையாடுவாரா? அல்லது கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவாரா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

களத்தில் பதற்றமின்றி அமைதியாக செயல்படும் டோனியை ‘கேப்டன் கூல்’ என்று செல்லமாக அழைப்பார்கள். இது குறித்து டெல்லியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டோனி கூறுகையில், ‘எனக்கும் எல்லோரையும் போல் உணர்வு, கோபதாபங்கள் உண்டு. ஆனால் களத்தில் மற்ற தனிநபர்களை காட்டிலும் எனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்கிறேன். அதனால் தான் எனது கோபம் வெளியே தெரிவதில்லை. உங்களை போல் நானும் சில நேரங்களில் கோபமும், ஏமாற்றமும் அடைந்திருக்கிறேன். வருத்தமடைந்திருக்கிறேன். இந்த விஷயத்தில் எது முக்கியம் என்றால், உணர்வுகளை ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிக்கலில் இருந்து மீண்டு அடுத்து என்ன திட்டமிடலாம், அடுத்து யாரை பயன்படுத்தலாம் என்று யோசிக்கும்போது, எனது உணர்ச்சிகளை நல்ல முறையில் கட்டுப்படுத்த முடிகிறது’ என்றார்.

இதற்கிடையே டோனியின் எதிர்காலம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று கூறுகையில், ‘இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கமிட்டியினரை வருகிற 24-ந்தேதி சந்தித்து பேச இருக்கிறேன். அப்போது டோனியின் எதிர்காலம் குறித்து தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வேன். அதன் பிறகு எனது கருத்தை சொல்வேன். அத்துடன் டோனியுடனும் பேசுவேன்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *