Tamilசினிமா

மரம் நடும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் – விவேக் வேண்டுகோள்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கடந்த 1978-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் முன்னாள் மாணவரும், நடிகருமான விவேக் கலந்து கொண்டார். பின்னர் அவர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் வறண்டதுடன், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்ய வேண்டும் என்றால் தொடர்ந்து மரக்கன்றுகளை நட வேண்டும். பள்ளிகளில் அதிகளவு மரங்களை நடும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். விடுமுறை நாட்களில் தங்கள் பகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார இளைஞர்கள் முன்வர வேண்டும்.

தற்போது மரக்கன்றுகள் நடவு செய்தால் மட்டும் தான் 10 ஆண்டுகளில் மழை பொழிவை பெற முடியும். ‘மலைகளின் இளவரசி’ கொடைக்கானலும், அரசியான ஊட்டியையும் கிழவியாக மாற்றி வருகிறோம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்துக்கு அதிகளவு மரங்கள் வெட்டப்பட்டதே காரணம் ஆகும். இவ்வாறு அவர் கூறினர்.

இதையடுத்து அரசியலுக்கு வருவீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நல்ல கருத்துகளை சினிமா மூலம் எடுத்துச் சொல்வதாகவும், வாய்ப்பு இருந்தால் அரசியலுக்கு வருவேன் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *