மன்னிப்பை பிரமாணபத்திரங்களாக தாக்கல் செய்ய வேண்டும் – எஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு கவர்னராக பன்வாரிலால் புரோகித் இருந்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக கவர்னர் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பெண்
பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் பரவிய ஒரு அவதூறு தகவலை பா.ஜ.க.வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் மறுபதிவு செய்து பகிர்ந்தார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்
அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி
சென்னை ஐகோர்ட்டில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜாரன வக்கீல், ‘சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை மனுதாரர்
நீக்கிவிட்டார். அதுதொடர்பாக மன்னிப்பும் கேட்டுவிட்டார். இந்த ஐகோர்ட்டிலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க தயாராக உள்ளார்’ என்று கூறினார். அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான
வக்கீல், இந்த வழக்கு விசாரணைக்கு ஒருமுறைகூட போலீஸ் முன்பு எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்று கூறினார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவரின் கருத்தை படித்து பார்க்காமல் துரதிஷ்டவசமாக அதை மனுதாரர் மறுபதிவு
செய்துவிட்டார். அவர் தனது தவறுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கூறி மனு தாக்கல் செய்துள்ளார். போலீஸ் விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக தயாராக உள்ளார்’ என்று
எஸ்.வி.சேகர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, எஸ்.வி.சேகர் மீது 4 வழக்குகள் உள்ளன. இந்த 4 வழக்குகளுக்கும் தனித்தனியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவது தொடர்பான
பிரமாணபத்திரங்களை அவர் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.