மத்திய அரசின் நடவடிக்கையால் தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ. 1,050 கோடி வருவாய் இழப்பு – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி முலம் மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க இந்த கூட்டம்
நடத்தப்பட்டது.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார். இதற்கு பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளன.

தமிழக அரசும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி முதல்-அமைச்சர்களுடனான சந்திப்பில், கடந்த நவம்பரில் மக்கள் மீதான பெட்ரோல் மற்றும் டீசல் விலைச் சுமையைக் குறைக்க மத்திய அரசு கலால் வரியைக் குறைத்ததைக்
குறிப்பிட்டார்.

சில மாநிலங்கள் ஒரே நேரத்தில் வரியைக் குறைத்திருந்தாலும், சில மாநிலங்கள் இந்த நன்மையை மக்களுக்கு வழங்கவில்லை. மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா,
ஜார்கண்ட் மற்றும் தமிழ்நாடு போன்ற பல மாநிலங்கள் மத்திய அரசுக்கு செவிசாய்க்கவில்லை என்றும், அந்த மாநிலங்களின் மக்கள் தொடர்ந்து வரி சுமையுடன் இருப்பதாகவும் பிரதமர் மோடி
கூறினார்.

ஆனால் அவரது கருத்துக்கு மாறாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, மத்திய அரசின் நடவடிக்கைக்கு முன்பே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பெட்ரோல், டீசல் மீதான
வாட் வரியை குறைத்தது. அந்த குறைப்பின் மூலம் தமிழக மக்களுக்கு லிட்டருக்கு ரூ.3 குறைவாக நிவாரணம் கிடைத்தது.

இதனால் மாநில அரசுக்கு ரூ.1,160 கோடி இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டது. இருப்பினும், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டிருந்த நிதி நெருக்கடியை மீறி, மக்கள் மீதான சுமையை
குறைக்க இந்த வரி குறைப்பு செய்யப்பட்டது.

மறுபுறம் கடந்த 2014ம் ஆண்டு முதல்முறையாக பிரதமர் மோடி பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரிகள் கணிசமாக உயர்ந்துள்ளன. மத்திய
அரசுக்கு வருமானம் பன்மடங்கு அதிகரித்தாலும், அதற்கு இணையான அளவு மாநில அரசுகளுக்கு வருமானம் உயர்வு இல்லை.

ஏனென்றால், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி மற்றும் கூடுதல் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய அடிப்படை கலால்
வரியைக் குறைக்கிறது.

202021 ஆம் ஆண்டில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.3,89,622 கோடியாக இருந்தது. இது 201920ஆம் ஆண்டில் இருந்த ரூ.2,39,452 கோடியை விட இது
63 சதவீதம் அதிகமாகும்.

மறுபுறம், 201920ம் ஆண்டில் பெறப்பட்ட ரூ.1,163.13 கோடிக்கு எதிராக, 202021ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான யூனியன் கலால் வரியிலிருந்து வரிப் பகிர்வின் பங்காக ரூ.837.75
கோடியை மட்டுமே பெற்றது.

3.11.2021 அன்று, மத்திய அரசு பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.5 வரி குறைந்தது. டீசலுக்கு லிட்டருக்கு 10 ரூபாய் குறைந்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ. 1,050 கோடி கூடுதல் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

1.8.2014 அன்று பெட்ரோல் அடிப்படை விலை லிட்டருக்கு ரூ. 48.55தாக இருந்தது. டீசல் லிட்டருக்கு ரூ.47.27 ஆக இருந்தது. 4.11.2021 அன்று பெட்ரோலின் அடிப்படை விலை ரூ. 48.36 ஆகவும், டீசல் விலை
லிட்டருக்கு ரூ. 49.69 ஆக இருந்தது.

1.8.2014 அன்று பெட்ரோலுக்கு மத்திய அரசின் வரிகள் ரூ. 9.48 ஆகவும் மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.3.57 ஆகவும் இருந்தது. அதேசமயத்தில் பெட்ரோல் மீது மாநில அரசின் வரி ரூ. 15.67 டீசல் மீதான வரி
லிட்டருக்கு ரூ.10.25 ஆகவும் இருந்தது.

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை குறைப்பதற்கு முன்பு, பெட்ரோல் மீதான மத்திய அரசின் கலால் வரி மற்றும் கூடுதல் கட்டணம் உட்பட வரி விதிப்பு லிட்டருக்கு ரூ. 32.90
இருந்தது. டீசலுக்கு லிட்டருக்கு ரூ. 31.80 ஆக இருந்தது.

இது 10 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.27.90 ஆக இருந்தது. டீசல் மீதான வரி விதிப்பு லிட்டருக்கு ரூ.21.80 ஆக இருந்தது.

எனவே, 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது (அடிப்படை விலை ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தபோது), மத்திய அரசு பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.18.42 அதாவது தோராயமாக 200 சதவீதம்
அதிகரிக்கப்பட்டுள்ளது. அது போல டீசலுக்கு லிட்டருக்கு ரூ.18.23 கூடுதல் வரி விதிக்கிறது. 2014 ம் ஆண்டு பதவியேற்றபோது நடைமுறையில் இருந்த வரிகளுடன் ஒப்பிடும்போது இது 500 சதவீதம்
அதிகமாகும்.

பெட்ரோல் விலை 2014ம் ஆண்டு ரூ. 71.74க்கு விற்கப்பட்டது. தற்போது அது 110 ரூபாய் 84 காசுக்கு விற்கப்படுகிறது. டீசல் 2014ம் ஆண்டு லிட்டருக்கு ரூ.62.27 காசுக்கு விற்கப்பட்டது. தற்போது 100 ரூபாய்
94 காசுக்கு விற்பனையாகிறது.

தமிழகத்தில் தற்போது பெட்ரோல் மீது தமிழக அரசு வரியாக ரூ. 22.54 விதிக்கப்பட்டுள்ளது. டீசல் மீது லிட்டருக்கு ரூ.18.45 வரியாக விதிக்கப்படுகிறது.

2014ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, முந்தைய அ.தி.மு.க. அரசு விதித்த கூடுதல் வரிகளை விட ரூ. 3 குறைக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்த பிறகு, மாநிலங்கள் தங்கள் சொந்த வரிகளை வசூலிப்பதற்கும், வருவாயை உயர்த்துவதற்கும் கணிசமான அதிகாரங்களை இழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட் தொற்றுநோய் காரணமாக மாநிலங்கள் இரட்டைத் தாக்கத்தை எதிர்கொண்டன. அவற்றின் நிதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் கோவிட் நிவாரண நடவடிக்கைகளுக்கு பெரிய
அளவிலான கூடுதல் செலவினங்களைச் செய்கிறது.

மேலும், ஜி.எஸ்.டி. இழப்பீட்டு முறை 30.6.2022 அன்று முடிவடைகிறது, மேலும் தமிழ்நாடு உட்பட பெரும்பாலான மாநிலங்கள் மாநில நிதியில் தொற்றுநோயால் ஏற்பட்ட நெருக்கடியைக் கருத்தில்
கொண்டு இழப்பீட்டை நீட்டிக்குமாறு ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளன. இருப்பினும், 30.6.2022க்குப் பிறகு இழப்பீடு தொடருமா இல்லையா என்பது குறித்து மத்திய அரசிடம் இருந்து
எந்தத்தெளிவும் இல்லை.

தி.மு.க. அரசு எப்போதும் கூட்டுறவு கூட்டாட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறது. பேரறிஞர் அண்ணா, மற்றும் முத்தமிழ்அறிஞர் கலைஞர் காலத்திலிருந்தே அதை எழுத்திலும் உணர்விலும்
கடைப்பிடித்து வருகிறோம். நமது தற்போதைய முதல்-அமைச்சரின் கீழும் அதைத் தொடர்கிறோம்.

விதிக்கப்படும் கலால் வரி மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவற்றைக் குறைத்து அவற்றை அடிப்படை வரி விகிதங்களுடன் இணைக்க வேண்டும் என்று நாங்கள் பலமுறை மத்திய அரசிடம்
வலியுறுத்தியுள்ளோம். இதனால் யூனியன் வரிகளின் வருவாயில் மாநிலங்கள் தங்கள் உரிமைப் பங்கைப் பெறுகின்றன.

மத்திய அரசின் வரிகள் தொடர்ந்து அபரிமிதமாக இருப்பதால், மாநில அரசு வரிகளை மேலும் குறைப்பது நியாயமானதாகவோ, சாத்தியமாகவோ இல்லை. அனைவருக்கும் நிலைமையை
மேம்படுத்துவதற்கான ஒரே, எளிமையான மற்றும் நியாயமான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும்.

மத்திய அரசு கலால் வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை முதலில் குறைக்க வேண்டும். 2014ம் ஆண்டு இருந்த விகிதங்களுக்குத் திரும்ப வேண்டும் என்று நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
மாநில அரசுகளால் மேலும் வரிகுறைப்பு செய்ய இயலாது. அது மாநில அரசின் பொருளாதாரத்துக்கு உகந்தது அல்ல. இதை மத்திய அரசு கவனிக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.