மத்தியில் மீண்டும் மோடி தான் ஆட்சி அமைப்பார் – டாக்டர்.ராமதாஸ் நம்பிக்கை

அ.தி.மு.க. கூட்டணி சார்பில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து நேற்று இரவு பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் பல்வேறு சாதனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களை பற்றி கவலைப்படுகிற ஆட்சியாக இருக்கிறது. நாங்களும் ஆலோசனைகளை கூறி வருகிறோம். முதல்-அமைச்சரும், நானும் விவசாயி. எனக்கு விவசாயத்தை பற்றி நன்றாக தெரியும். சிதம்பரம் தொகுதியில் 400 கோடி ரூபாயில் கொள்ளிடம் தடுப்பு அணை திட்டத்தை அமல்படுத்துவதாக அருண்மொழிதேவன் சொன்னார். அது ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம்.

மத்தியில், மோடி ஆட்சி தான் மீண்டும் வரப்போகிறது. 40 தொகுதிகளிலும் நம்ம கூட்டணி தான் வெற்றி பெறப்போகிறது. மோடி ஆட்சிக்கு வந்ததும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வராதபடி நாம் அழுத்தம் கொடுப்போம். மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்ததே எதிர்க்கட்சி தலைவர் தான். அவர் என்னை பற்றி ஏதேதோ பேசி வருகிறார். கோபம் குடியை கெடுக்கும், நாம் மக்களை பற்றி சிந்திக்கிறோம்.

நமது கூட்டணி வளர்ச்சிக்கான கூட்டணி. தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி தான் அக்கறை கொள்கிறோம். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் பெறுவார். அரியலூர் ஜெயங்கொண்டம் குன்னம் தொகுதிகளில் இதை விட அதிகமாக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார். 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *