மகாராஷ்டிரா ஊரடங்கில் தளர்வு! – மும்பையில் பேருந்து சேவை தொடங்கியது

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து புதிய தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு சதவீதம், ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பிய சதவீதம் ஆகியவற்றின் அடிப்படையில்  மாவட்ட, மாநகர பகுதிகள் 5 வகையாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தளர்வுகளுன் கூடிய ஊரடங்கு ஜூன் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்த தளர்வுகளின் படி இன்று மும்பையில் உள்ளூர் பேருந்து சேவை (பெஸ்ட் பேருந்து) தொடங்கியது. இதனால் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் இன்று குவியத் தொடங்கினர்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி பயணிகள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளதால், கொரோனா மீண்டும் பரவ வாய்ப்பு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

உணவகங்கள், கடைகள், பொது இடங்கள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. உணவகங்கள் மாலை 4 மணி வரை செயல்படலாம். 50 சதவீத வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம். மால்கள், தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ்கள் திறக்க அனுமதி இல்லை. அவை தொடர்ந்து மூடப்பட்டுள்ளளன.

கொரோனா பாதிப்பு நிலவரத்தை பொறுத்து கூடுதல் தளர்வுகள், கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளூர் நிர்வாகங்கள் முடிவு எடுக்கலாம்.

மகாராஷ்டிராவில் நேற்று கொரோனா பாதிப்பு 12,557 ஆக குறைந்துள்ளது. 14433 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 95.05 சதவீதமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 233 பேர் இறந்துள்ளனர். 1.85 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.