போலீஸ் விவகாரத்தில் அமைச்சர்கள் தலையிடக்கூடாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் போலீஸ் விவகாரத்தில் அமைச்சர்கள் நேரடியாக தலையிடக்கூடாது என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் அமைச்சரவை கூட்டம் முடிந்தபிறகு அதிகாரிகள் சென்ற பின் அமைச்சர்களை மட்டும் அமர வைத்து மு.க.ஸ்டாலின் இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காவல்துறையில் ஏதேனும் பிரச்சினைகளுக்காக பேச வேண்டும் என்றால் தனது அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டுமே தவிர நேரடியாக யாரும் தலையிடக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் கண்டிப்புடன் கூறி இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி பாராட்டுகளையும் பெற்றுள்ளது.