போருக்கு போவது போல உள்ளது – விமான பயணம் குறித்து நடிகை மீனா கருத்து
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘திருஷ்யம் 2’. முதல் பாகத்தில் நாயகியாக நடித்த மீனாவே இதிலும் நடிக்கிறார். படப்பிடிப்புக்காக சென்னையிலிருந்து கேரளாவுக்கு விமானத்தில் பயணித்துள்ளார். விமானப் பயணத்தின்போது கொரோனா அச்சுறுத்தலிலிருந்து தற்காத்துக் கொள்ள பிபிஇ உடைகள் அணிந்துள்ளார் மீனா.
அந்தப் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மீனா கூறியிருப்பதாவது: “நான் விண்வெளிக்குச் செல்வதுபோல இருந்தாலும், நான் போருக்குச் செல்வதைப் போல உணர்கிறேன். 2 மாதங்களுக்குப் பிறகு பயணம் செய்கிறேன். விமான நிலையம் மிகவும் அமைதியாகவும், ஆள் அரவமற்றதாகவும் இருப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.
பலரும் என்னைப் போல உடையணியாமல் இருந்தது இன்னும் ஆச்சரியமாக இருந்தது. இது மிகவும் வசதியற்ற ஆடை என்று சொல்வேன். குளிர்ந்த வானிலையும், ஏசியும் இருந்தபோதும் மிகவும் வெப்பமாகவும், இறுக்கமாகவும், வியர்வையை ஏற்படுத்தக் கூடியதாகவும் இந்த ஆடை உள்ளது. முகத்தைக் கூட துடைக்க முடியவில்லை. குறிப்பாகக் கையுறைகள். இரவு பகலாக இந்த பிபிஇ கவச உடையுடன் இருந்த சுகாதாரப் பணியாளர்களுக்குத் தலைவணங்குகிறேன்.
இத்தகைய சிரமத்திலும் அவர்கள் நமது வலியைப் புரிந்துகொண்டு எப்போதும் நம்மை எப்போதும் பாதுகாக்கிறார்கள். அவர்கள் மீது நான் வைத்திருக்கும் மதிப்பு அதிகமாகி விட்டது. மனித இனத்துக்கும் நீங்கள் செய்து வரும் தன்னலமற்ற சேவைக்கு நன்றி”. இவ்வாறு மீனா தெரிவித்துள்ளார்.