போதைப்பொருள் விவகாரம் – நடிகை சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன் கிடைத்தது

கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் குறித்து, மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, இவர்களது நண்பர்கள் ரவிசங்கர், ராகுல், போதைப்பொருட்கள் விற்பனையாளர்கள் லோயம் பெப்பர் சம்பா, வீரேன் கண்ணா, வைபவ் ஷெட்டி, பிரதிக் ஷெட்டி உள்பட 14-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் காட்டன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்த விவகாரத்தில் கைதான நடிகைகள் 2 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். போதைப்பொருள் விசாரணை வழக்கில் நடிகை சஞ்சனா கல்ராணி செப்டம்பர் 8-ம் தேதி கைது செய்யப்பட்டார். சஞ்சனா கல்ராணி கர்நாடக ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்தார். ஜாமீன் மனுவில் தனக்கு உடனடியாக மருத்துவ அறுவை சிகிச்சை தேவை என்றும் ஜாமீன் கிடைக்காவிட்டால் தனக்கு ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது என கூறி இருந்தார்.

நீதிமன்றம் அவரை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள உத்தரவிட்டது அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

போதைப்பொருள் விசாரணை வழக்கில் சஞ்சனாவுடன் நடிகர் ராகினி திவேதியும் கைது செய்யப்பட்டார். இருப்பினும், ராகினிக்கு தற்போது வரை ஜாமீன் வழங்கப்படவில்லை.

நடிகை சஞ்சனா கல்ராணியின் உண்மையான பெயர் அர்ச்சனா கல்ராணி ஆகும். அவர், சினிமா துறையில் நடிக்க வந்ததால் தனது பெயரை சஞ்சனா கல்ராணி என்று மாற்றி இருந்தார். சஞ்சனா கல்ராணி தமிழில் பிரபல நடிகையாக இருந்து வரும் நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார்.