போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களின் பெயரை வெளியிட தயார் – ஸ்ரீ ரெட்டி அறிவிப்பு

திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் கடந்த சில வாரங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் நடிகை ரியா மற்றும் கன்னடத் திரையுலகைச் சேர்ந்த ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி போன்ற நடிகைகள் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருசில நடிகர் நடிகைகள் இந்த விவகாரத்தில் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ஏற்கனவே திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு தகுந்த பாதுகாப்பு அளித்தால் போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்களின் பெயர்களை தெரிவிக்க தயார் என்று தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோக்களின் வீடுகளில் நடக்கும் பார்ட்டிகள் அனைத்திலும் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாகவும், போதைப் பொருள் இல்லாத பார்ட்டிகளே இல்லை என்றும் ஸ்ரீரெட்டி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

மேலும் தெலுங்கு பிரபலங்களின் வாரிசு நடிகர்கள் நடத்தும் நடன பார்ட்டிகளிலும் போதைப் பொருள் உள்ளது என்றும் அது மட்டுமின்றி பல ஒழுக்கக் கேடான விஷயங்களும் நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா அரசு எனக்கு தகுந்த பாதுகாப்பு அளித்தால் போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள் மற்றும் நடிகைகளின் பெயரை தெரிவித்த தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.