’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்தது என் வாழ்நாளில் மறக்க முடியாதது – ஜெயம் ரவி

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில், தன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்து படமாக்கப்பட்டு விட்டதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். மேலும், இயக்குனர் மணிரத்னம் குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: “தலைமை பண்பும், கற்றலும் ஒன்றோடொன்று இன்றியமையாதவை. இந்த பிரம்மாண்ட படைப்பை இவ்வளவு துல்லியத்தோடு நீங்கள் முன்னெடுத்து, அதே நேரத்தில் சுற்றியிருப்பவர்களுக்கும் கற்றுக் கொடுத்ததை பார்த்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.

உங்கள் ஆசீர்வாதங்கள், உங்கள் நகைச்சுவை உணர்வு, உங்கள் அக்கறை காட்டும் இயல்பு, இவை எல்லாவற்றையும் தாண்டி என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கை என எல்லாவற்றுக்கும் நன்றி. உங்களோடு படப்பிடிப்பு தளத்தில் மீண்டும் இருக்க முடியவில்லையே என்று நிச்சயம் வருந்துவேன்.

மீண்டும் உங்களோடு பணிபுரியும் நாளை எதிர்நோக்குகிறேன். பொன்னியின் செல்வன், ஒன்றல்ல இரண்டு படங்கள் முடிந்துவிட்டன. கனத்த இதயத்தோடு அடுத்த புது முயற்சிகளுக்குச் செல்கிறேன்” என தெரிவித்துள்ளார்.