பெங்களூர் திரையரங்கங்களில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்

கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் க/பெ.ரணசிங்கம். ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள, இப்படடத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி உள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை வருகிற அக்டோபர் 2-ந் தேதி ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். இந்த படத்தை ஓடிடியில் ஒரு முறை பார்ப்பதற்காக 199 ரூபாய் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இப்படம் அதே நாளில் திரையரங்கிலும் வெளியாக உள்ளதாம். சமீபத்தில் மத்திய அரசு டிரைவ்-இன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது. அந்த வகையில் பெங்களூரில் டிரைவ்-இன் தியேட்டர்கள் வரும் 2ம் தேதி திறக்கப்பட இருப்பதாகவும் இதனை அடுத்து ‘க/பெ ரணசிங்கம்’ படம் பெங்களூரில் உள்ள டிரைவ்-இன் தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள டிரைவ்-இன் தியேட்டர்களிலும் இந்த படம் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் பி.விருமாண்டி இப்படத்தை இயக்கி உள்ளார். பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த பெரிய கருப்பத்தேவரின் மகன் தான் விருமாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.