Tamilசெய்திகள்

புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையால் டாஸ்மாக் மதுவிற்பனை உயர்வு!

புத்தாண்டு, பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் மது விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம்.

இதற்காக டாஸ்மாக் நிறுவனம் பிராந்தி, விஸ்கி, வோட்கா, ஜின், ரம், பீர் உள்ளிட்ட பல்வேறு வகை மதுபானங்களை பெட்டி பெட்டியாக விற்பனைக்கு வைத்திருந்தது.

இதில் புத்தாண்டுக்கு முந்திய நாளில் இருந்து மது விற்பனை அதிகமாகி கொண்டே போனது. டாஸ்மாக் கடைகளில் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மது விற்பனை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது போல் இந்த ஆண்டும் மது விற்பனை அதிகமாகி உள்ளது.

புத்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறை நாட்களில் மது விற்பனை அதிகரிக்கும் என்பதை முன் கூட்டியே அறிந்து வைத்திருந்தோம். அதனால் தேவையான அளவு மது பெட்டிகளை கடைகளில் வைத்திருந்தோம். இதில் கிறிஸ்துமஸ் விடுமுறை நாளில் விற்பனை ஓரளவுக்கு தான் இருந்தது.

ஆனால் 29, 31 ஆகிய தேதிகளில் மது விற்பனை அதிகமானது. மாலையில் இருந்து இரவு வரை மதுக்கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

சென்னையில் துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், கிண்டி, எம்.ஜி.ஆர். நகர், வண்ணாரப்பேட்டை, மதுரவாயல் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சினிமா தியேட்டரில் கூட்டம் கூடுவது போல் அதிக கூட்டம் கூடிவிட்டது.

கூட்டத்தை சமாளிக்க முடியாத அளவுக்கு விற்பனையாளர்கள் திணறிவிட்டனர். அன்று ஒரு நாளில் மட்டும் 3 மடங்கு விற்பனை அதிகரித்தது.

தமிழகம் முழுவதும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ந்தேதி ஆகிய 2 நாளில் மட்டும் ரூ.350 கோடிக்கு மது விற்பனை நடந்தது. கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறை நாட்களில் ரூ.100 கோடிக்கு மது விற்பனை நடந்தது.

கடந்த ஆண்டு 300 கோடி அளவுக்குதான் விற்பனை இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மது விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *