புதுவையில் 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

புதுவை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி கடந்த 25-ந்தேதி முதல் 80 வயதுக்கு மேற்பட்டோர், கொரோனா நோயாளிகள், அத்தியாவசிய பணியில் ஈடுபடுவோரிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் வரை புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் 5 ஆயிரத்து 501 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் மொத்தம் ஆயிரத்து 558 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள்ளது.

அனைத்து வாக்குச்சாவடிகளையும் இணையவழி மூலம் கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளின் நுழைவு வாயில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடியில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் மாநில, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தபடி நேரலையாக கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.