புதிய ரேஷன் அட்டை விண்ணப்பம் ரத்தாவதை தடுக்க புதிய நடவடிக்கை!

தமிழகத்தில் புதிய ரே‌ஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உணவுப் பொருள் வழங்கல் துறையின் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

புதிய ரே‌ஷன் கார்டுகளுக்காக விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். உணவு வழங்கல் துறை அதிகாரிகள் அந்த விண்ணப்பத்தை இணையதளம் மூலமாகவே சரிபார்த்து வீடுகளில் சென்று ஆய்வு செய்ய களப்பணியாளர்களை அனுப்பி வைப்பார்கள்.

அவர்கள் வீடுகளில் சென்று ஆய்வு செய்து புதிய ரே‌ஷன் கார்டு வழங்க பரிந்துரை செய்வார்கள். இந்த நிலையில் போதிய ஆவணங்கள் இல்லாவிட்டால் ரே‌ஷன் கார்டு விண்ணப்பங்கள் ஆன்லைனிலேயே நிராகரிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக ரே‌ஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்யும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இதையடுத்து ரே‌ஷன் கார்டுக்கு விண்ணப்பித்த பிறகு கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால் விண்ணப்பம் ரத்தாவதை தடுத்து மீண்டும் பதிவேற்றம் செய்ய புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ரே‌ஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் போதிய ஆவணங்களை தாக்கல் செய்யாவிட்டால் ரே‌ஷன் கார்டு விண்ணப்பம் இதுவரை நிராகரிக்கப்பட்டு வந்தது. தற்போது புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளதால் இனி ரே‌ஷன் கார்டு விண்ணப்பம் ரத்து செய்யப்படாது.

இதற்காக இணையதளத்தில் ‘மறுபரிசீலனை விண்ணப்பம்’ என்ற புதிய பகுதி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேவைப்படும் ஆவணங்கள் பற்றிய விவரம் குறுந்தகவல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும். விண்ணப்பிக்கும் போது மொபைல் எண்ணுக்கு அனுப்பிய குறியீட்டு எண்ணை மறுபரிசீலனை விண்ணப்ப பக்கத்தில் குறிப்பிட வேண்டும்.

அந்த பக்கம் திறக்கப்பட்டதும் செல்போன் எண்ணை பதிவு செய்து ஒருமுறை பாஸ்வேர்டை பதிவிட வேண்டும். அதன்பிறகு அந்த பக்கத்தில் ஏற்கனவே விண்ணப்பித்த விவரங்களையும், மேல் பகுதியில் தேவைப்படும் விவரங்களையும் காட்டும்.

அதன் அடிப்படையில் தேவைப்படும் ஆவணங்களை பதிவேற்றி திருத்தங்களை செய்து சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரிகள் அதை சரிபார்த்து புதிய ரே‌ஷன் கார்டு வழங்குவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.