புதிய கட்சி பற்றி தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நாளை அறிவிக்கிறார்

தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி தேசிய அளவில் கால்பதிக்க விரும்புகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கட்சியின் ஆண்டு விழாவில் தேசிய அரசியலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த மாதம் கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ், தேசிய அரசியலில் குதிக்க வேண்டும் என்று கட்சியின் மாவட்ட தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். கடந்த மாதம் 5-ம் தேதி பேசிய சந்திரசேகர ராவ் மத்தியில் 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. அல்லாத கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தார்.

கடந்த மாதம் 12-ம் தேதி சட்டசபையில் பேசிய சந்திரசேகர ராவ், தேசிய கட்சி தொடங்கப் போவதாக முதல் முதலில் அறிவித்தார். தேசிய அளவில் கால் பதிக்கும் நோக்கத்திலும், பா.ஜனதாவுக்கு எதிராக புதிய அணி உருவாக்கும் நோக்கத்திலும் சந்திரசேகர ராவ், பிற தலைவர்களை சந்திக்கத் தொடங்கினார். பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், விஜயதசமி தினத்தன்று (நாளை) புதிய கட்சி தொடங்குவது பற்றி சந்திரசேகர ராவ் அறிவிப்பு வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.