பிரியங்கா காந்தியின் காருடன் அணி வகுப்பில் வந்த கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்

டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது, உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த நவ்நீத் என்ற வாலிபர் உயிரிழந்தார். அவர் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்ததாக விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டி உள்ளன. ஆனால், டிராக்டர் கவிழ்ந்ததில் அவர் இறந்ததாக காவல்துறை ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், போராட்டத்தின்போது உயிரிழந்த நவ்நீத்தின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அவரது பாதுகாப்பிற்காக காவல்துறை வாகனங்களும், கட்சி நிர்வாகிகளின் வாகனங்களும் அணிவகுத்துச் சென்றன.

ஹாபூர் சாலையில் சென்றபோது, அணிவகுப்பில் வந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் பிரியங்கா காந்தியின் பயணத்திற்கு எந்த தடையும் ஏற்படவில்லை.