பிரதமர் மோடி நாளை மாலத்தீவு செல்கிறார்
தெற்காசிய நாடான மாலத்தீவுக்கு நாளை (சனிக்கிழமை) பிரதமர் மோடி அரசு முறை பயணமாக செல்கிறார். அங்கு இருதரப்பு உறவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மாலத்தீவு அதிபர் இப்ராகீம் சாலிகுடன் பிரதமர் பேச்சு நடத்துகிறார்.
கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையிலான முதல் சுற்றுப் பயணம் இதுவாகும். கடந்த ஆண்டு நவம்பரில் மாலத்தீவு அதிபர் இப்ராகீம் சோலி பதவி ஏற்பு விழாவுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். எனினும் அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை.
தற்போது மேற்கொள்ளும் பயணத்தின் போது இரு நாடுகளுக்கிடையே சில துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மாலத்தீவில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு உதவுமாறு அந்நாட்டு அதிபர் சோலி கோரிக்கை வைத்துள்ளார். அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கவும் இந்தியா உதவ உள்ளது.
மாலத்தீவு சுற்றுப் பயணத்துக்கு பின் நாளை மறுநாள் (9-ந்தேதி) பிரதமர் மோடி இலங்கை செல்கிறார். இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது 3 தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் இந்தியர்கள் உள்பட 250 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு பிறகு இலங்கை செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர் மோடி ஆவார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதற்கு இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும் என்பதை வலியுறுத்தும் வகையில் இலங்கைக்கு பிரதமர் பயணம் மேற்கொள்கிறார் என வெளியறவுத்துறை செயலாளர் விஜய கோகலே கூறினார்.