Tamilசெய்திகள்

பிரதமர் மோடிக்காக தயாரான அதிர்ஷ்ட நாற்காலி !

தேர்தல் என்றாலே ராசி, அதிர்ஷ்டம் ஆகியவற்றின் மீது அரசியல்வாதிகளுக்கு நம்பிக்கை வந்து விடுகிறது. அதன் அடிப்படையில் அவர்கள் வெற்றி, தோல்வியை முடிவு செய்கிறார்கள். சில நேரங்களில் அப்படியே அமைந்து விடுவதுதான் விசித்திரம். இதற்கு யாரும் விதிவிலக்கு ஆகி விட முடியாது.

உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் நகரத்தில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் மரத்தலான ஒரு நாற்காலியை ஒரு சிறிய கண்ணாடி அறையில் வைத்து பாதுகாத்து வருகிறார்கள்.

இந்த நாற்காலி பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்த நாற்காலி. அதிர்ஷ்ட நாற்காலி.

அந்த நாற்காலியில் பிரதமர் மோடி அமர்ந்தபோதெல்லாம் அது பா.ஜனதா கட்சிக்கு வெற்றியைத் தேடித்தந்திருக்கிறது என்பதுதான் கடந்த கால வரலாறு என சொல்லப்படுகிறது.

முதன் முதலாக 2013-ம் ஆண்டு, அக்டோபர் 19-ந் தேதி அங்குள்ள இந்திராநகர் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அந்த நாற்காலியில் மோடி அமர்ந்தார். 2-வது முறையாக 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தலுக்கு முன்பாக கோயலா நகர் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் அதே நாற்காலியில் அவர் அமர்ந்தார்.

அதைத் தொடர்ந்து நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மோடி பிரதமர் ஆனார்.

2017-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அங்கு நிராலாநகர் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மோடி, மூன்றாவது முறையாக அதே நாற்காலியில் அமர்ந்தார்.

அப்போது உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) கான்பூர் வந்து, வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்துப்பேசுகிறார்.

இப்போதும் அவர் அந்த அதிர்ஷ்ட நாற்காலியில் அமர வேண்டும் என்று கான்பூர் நகர பா.ஜனதா கட்சி, வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதி இருக்கிறது. இதனால் இன்றைய கூட்டத்திலும் அவர் அந்த நாற்காலியில் அமர்வாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதையொட்டி கான்பூர் நகர பா.ஜனதா கட்சி தலைவர் சுரேந்திர மைதானி கூறுகையில், “இந்த நாற்காலி மிகவும் ராசியானது. இது 2014 பாராளுமன்ற தேர்தலிலும், 2017-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலிலும் எங்கள் கட்சிக்கு வெற்றியைத் தேடித்தந்தது. அத்தேர்தல்களுக்கு முன்னதாக பிரதமர் மோடி, இந்த அதிர்ஷ்ட நாற்காலியில் அமர்ந்துள்ளார். இது ராசியான நாற்காலி என்பதை உணர்ந்துதான் 2013-ம் ஆண்டு கூட்டத்துக்காக இந்த நாற்காலியை தந்து உதவியவரிடம் இருந்து வாங்கி பாதுகாத்து வருகிறோம். இப்போது அந்த நாற்காலிக்கு ‘பாலிஷ்’ போட்டு வைத்திருக்கிறோம். இதில் நான்காவது முறையாக பிரதமர் மோடி வந்து அமர வேண்டும். அப்படி அவர் அமர்கிறபோது பா.ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெறும். பிரதமராக மோடி மறுபடியும் வருவார்” என குறிப்பிட்டார்.

அதிர்ஷ்ட நாற்காலி, மோடிக்காக காத்திருக்கிறது. பிரதமர் நாற்காலியும் காத்திருக்குமா என்பதை அறிய பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை காத்திருந்துதான் ஆக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *