பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று பிறந்தநாள் – வாரணாசியில் கொண்டாடுகிறார்

இன்று 68 வது பிறந்தநாள் காணும் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பல்வேறு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மோடி நீண்ட ஆயுளுடன் நாட்டிற்கு பல ஆண்டுகள் அர்ப்பணிப்புமிக்க சேவை செய்ய வாழ்த்துவதாக கூறியுள்ளார். மோடி நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்தனை செய்வதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மோடியின் பல்வேறு புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் டுவிட்டரில் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தனது பிறந்தநாளை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று தாயார் ஹிராபாவை சந்தித்து ஆசி பெற்றார் மோடி. இந்த ஆண்டு வாரணாசியில் எளிமையாக பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடும் அவர் பின்னர் காசி விஸ்வநாதர் ஆலயம் சென்று சிவபெருமானை தரிசிக்க உள்ளார்.

வாரணாசி சுற்றுப்பயணத்தின்போது பாபத்பூர்-ஷிவபூர் சாலை விரிவாக்கம், ரிங் ரோடு-2 மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சில திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மோடி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடி சுற்றுப்பயணத்தை முன்னிட்ட வாரணாசியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மோடியின் பிறந்தநாளான இன்று அவருக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இது தொடர்பான ஹேஷ்டேக்குகள் இன்று இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *