‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ விரைவில் வெளியாகிறது

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும். ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால், ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. பின்னர் அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16-ந் தேதி வரை ‘பிக்பாஸ் 4’ நடைபெற்றது.

கடந்த சீசனை போல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனும் வருகிற அக்டோபர் மாதம் தான் தொடங்க உள்ளது. தற்போது இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

இந்நிலையில், ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சிக்கான புரமோஷன் போட்டோஷூட் நிகழ்வு இன்று தொடங்க உள்ளதாம். இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்ள உள்ளார். மேலும் இந்த வாரத்தில் ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சிக்கான புரோமோ வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் இதில் கலந்துகொள்ள உள்ள பிரபலங்கள் தேர்வு இறுதிக்கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீசனில் சினிமா பிரபலங்கள் அதிகளவில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.