பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா

தென்னிந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தெலுங்கில் இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 4-வது சீசன் தொடங்கியது. 3-வது சீசனைப்போல் இந்த சீசனையும், நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். ஜூனியர் என்.டி.ஆர், நானி ஆகியோர் சீசன் 1, 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.

இதனிடையே வெளிநாட்டில் நடைபெறும் ‘வைல்ட் டாக்’ என்கிற படத்தின் படப்பிடிப்புக்காக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களுக்கு நாகார்ஜுனா விடுப்பு எடுத்துள்ளார். அவருக்கு பதிலாக நடிகை சமந்தா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்பட்டது.

அதன்படி நேற்று பிக்பாஸ் 4 தொகுப்பாளராக சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த சமந்தாவுக்கு நடிகர் நாகார்ஜூனா வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து பிக்பாஸ் போட்டியாளர்களும் சமந்தாவை பார்த்ததும் ஆச்சர்யத்தில் துள்ளிக்குதித்து ஆரவாரம் செய்தனர். இன்னும் சில வாரங்களுக்கு சமந்தா தான் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.