Tamilசினிமா

பா.ஜ.க-வில் இணைய நடிகர் விஷால் முடிவு?

தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் ஹீரோவான நடிகர் விஷால் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதுபற்றி கடந்த மாதம் ஆந்திராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது விஷாலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஷால், ஒருவர் 100 ரூபாய் செலவு செய்து சேவை செய்தாலே அவர் அரசியலுக்கு வந்து விட்டதாக அர்த்தம். அதனால் நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். தீவிர அரசியலுக்கு வர இன்னும் காலமாகும் என்றார்.

இந்நிலையில் காசிக்கு சென்ற விஷால் அங்கு செய்துள்ள புனரமைப்பு பணிகளை பார்த்து வியந்தார். இதற்காக பிரதமர் மோடியை பாராட்டினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், “அன்புள்ள மோடி ஜி, நான் காசிக்குச் சென்றேன். அற்புதமான தரிசனம்-பூஜை செய்து, கங்கை நதியின் புனித நீரை தொட்டேன். கோவிலை புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எளிதாக எவரும் தரிசனம் செய்வதற்காக நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களுக்கு தலை வணங்குகிறேன். வணக்கம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இவரின் இந்த பதிவுக்கு பிரதமர் மோடியும் பதில் அளித்திருந்தார். அவர் தனது பதிவில் ‘காசியில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி’ என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி அவர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததும் அவர் விஷாலுக்கு பாராட்டு தெரிவித்ததும் அரசியல் தளத்தில் பரபரப்பானது. அவர் பா.ஜனதாவில் சேரலாம் என்ற தகவலும் பரவியது.

இதுபற்றி அப்போது விஷால் கூறும்போது, “நான் மட்டுமல்ல காசிக்கு யார் சென்று பார்த்தாலும் அங்கு கோவில்கள் புனரமைக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தால் ஆச்சரியப்படுவார்கள். அப்படித்தான் என் உணர்வுகளை நான் பதிவிட்டேனே தவிர இதில் அரசியல் எதுவும் இல்லை. ஆன்மீக பயணத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது” என்றார்.

இப்போது மீண்டும் அவர் பா.ஜனதாவில் இணையப் போவதாக தகவல் பரவி வருகிறது. பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி திண்டுக்கல் வருகிறார். அப்போது மோடி முன்னிலையில் பா.ஜனதாவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை விஷால் தரப்பில் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.