பா.ஜ.க எந்த அவதாரம் எடுத்தாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது – அமைச்சர் பி.கே.சேகர் பாபு பேட்டி

சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், அதன் முன்னேற்றம் குறித்தும் மண்டல வாரியாக இணை ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார் கூட்டத்தின் முடிவில் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

பா.ஜ.க.வை சேர்ந்த வி.பி.துரைசாமி நிலங்கள் மீட்பு விஷயத்தில் உரிய ஆதாரங்களை காட்டுங்கள் என தெரிவித்துள்ளாரே?

பதில் : தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. தேவையற்ற கேள்விகளுக்கு பதில் கூறி எங்களுடைய காலத்தை நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இருந்தாலும் அவர் சொல்லிய குற்றச்சாட்டுக்காக ஒரே ஒரு விளக்கம் 06.04.2022 அன்று இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் மீட்கப்பட்ட நிலங்கள் குறித்து முதல் புத்தகத்தை வெளியிட்டு இருக்கின்றோம். அதில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு நிலங்கள் மீட்கப்பட்டன, மீட்கப்பட்ட நிலங்களுடைய புகைப்படங்கள் மீட்கப்பட்ட நிலங்களின் அளவு அதனுடைய மதிப்பு அனைத்தையும் புள்ளி விவரமாக வெளியிட்டு இருக்கின்றோம்.

அடுத்த புத்தகத்தையும் விரைந்து முடித்து வெளியிட உள்ளோம். தற்போது வரையில் 3,739 கோடியே 42 லட்சம் சொத்து மதிப்புடைய நிலங்களை மீட்டு இருக்கின்றோம். அவருக்கு இந்த புத்தகத்தை இன்றைக்கு தபாலிலோ அல்லது எங்கள் துறை சார்ந்த அதிகாரிகள் மூலமாகவோ அவருடைய வீட்டுக்கு கொண்டு சேர்க்கப்படும்.

இந்து முன்னணியின் மாநில தலைவர் ஆதீன சொத்துக்கள் அறிவாலய சொத்துக்கள் அல்ல என்று கூறியுள்ளது குறித்து?

பதில் : நாங்கள் எங்காவது சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளோமா? எங்கெல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு செல்ல முடியுமோ அங்குதான் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்க செல்கிறோமே தவிர, எங்களுக்கு சட்ட உரிமை இல்லாத இடத்திற்கு நாங்கள் எங்குமே செல்வதில்லை. அவர் அப்படி சட்டத்தை மீறி நாங்கள் எங்காவது செல்வதாக குறிப்பிட்டால் அதற்கு உகந்த பதிலை அளிக்கின்றோம்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கான ஏற்பாடுகள் எந்த நிலையில் உள்ளது?

பதில் : இதுவரையில் சரித்திரத்தில் இல்லாத அளவிற்கு திருவண்ணாமலையில் அம்மணி அம்மன் கோபுரம் உட்பட நான்கு கோபுரங்களிலும் கோபுரத்தை சுத்தம் செய்திருக்கின்றோம். 30 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம்.

சில கோயில்களில் முக்கிய பிரமுகர்கள் கருவறை அருகில் சென்று தரிசனம் செய்கின்ற முறை எப்போது கட்டுப்படுத்தப்படும்.

பதில் : வி.ஐ.பி. தரிசனம் என்பது ஏதோ இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு ஆரம்பித்தவை அல்ல. அதை படிப்படியாக குறைக்கின்ற முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. நாளடைவில் படிப்படியாக எங்கெல்லாம் சாத்திய கூறுகள் இருக்கிறதோ அங்கெல்லாம் வி.ஐ.பி. தரிசனத்தை நிறுத்திட இந்து சமய அறநிலையத்துறை முயற்சிகளை மேற்கொள்ளும். திருத்தணி ஆடிக்கிருத்திகை விழாவின்போதும், திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவின்போதும், வி.ஐ.பி. தரிசனத்தை நிறுத்தி விட்டோம். மேலும், திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின்போது 600 நபர்கள் பாந்து என்ற முறையில் 10 நாட்கள் திருக்கோயில் உள்ளே தங்கும் முறையை முழுமையாக ஒழித்து உத்தரவிட்ட அரசு இந்த அரசு. அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையிலும், நீதிமன்றமும் இந்த ஆட்சி எடுத்த நடவடிக்கை சரியான நடவடிக்கை, திருப்பதி கோயிலில் இப்படி போய் இரவு யாராவது தங்க முடியுமா என்று ஒரு கேள்வியை கேட்டு அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்கள். திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்றது என தமிழகம் மாத்திரமல்ல மற்ற அண்டை மாநிலங்களும் பாராட்டினர். இந்த சிறப்பு கட்டண தரிசனத்தை, வி.ஐ.பி. தரிசனத்தை படிப்படியாக குறைப்பதற்கு முழுமையாக ஒழிப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும்.

பா.ஜ.க. பிசாசு வேகத்தில் வளர்ந்து வருகிறது என்று?

பதில் : பா.ஜ.க. ஒரு சைத்தான். இந்த ஆட்சியில் சைத்தான்களுக்கெல்லாம் வேலையில்லை. முதல்-அமைச்சர் எப்படிப்பட்ட பேய்களையும், விரட்டக்கூடிய சக்தி படைத்தவர். ஆதலால் பா.ஜ.க. எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் நிச்சயமாக காலூன்ற முடியாது. முதல்-அமைச்சர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “விழித்துக்கொண்ட தமிழகத்தை இனி எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது” என்று சொல்லி இருக்கின்றார். ஆகவே, தமிழக மக்கள் விழிப்போடு இருக்கின்றார்கள், பா.ஜ.க. போன்ற கட்சிகள் தமிழகத்தில் வேரூன்றுவதற்கு இடமே இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.