பார்முலா 1 கார்பந்தயம் – 6 வது சுற்றில் மெக்சிகோ வீரர் செர்ஜியோ பெரேஸ் வெற்றி

இந்த சீசனுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 6-வது சுற்றான அஜர்பைஜான் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள பாகு ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 306.049 கிலோமீட்டர் இலக்கை நோக்கி வழக்கம் போல் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் மெக்சிகோ வீரர் செர்ஜியோ பெரேஸ் (ரெட்புல் அணி) 2 மணி 13 நிமிடம் 36.410 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்று 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். பார்முலா1 கார்பந்தயத்தில் அவர் வசப்படுத்திய 2-வது வெற்றி இதுவாகும். அவரை விட 1.385 வினாடி பின்தங்கிய செபாஸ்டியன் வெட்டல் (ஜெர்மனி) 2-வதாகவும், பியரே கேஸ்லி (பிரான்ஸ்) 3-வதாகவும் வந்தனர். 7 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்தாலும் பிரேக் பிரச்சினையால் நேரம் விரயமானதால் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு முன்னணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பெனின் (நெதர்லாந்து) கார் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதால் பாதியிலேயே வெளியேற நேரிட்டது.

ஆனாலும் 6 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான வாய்ப்பில் வெர்ஸ்டப்பென் 105 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஹாமில்டன் 101 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், செர்ஜியோ பெரேஸ் 69 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 7-வது சுற்று போட்டி பிரான்சில் வருகிற 20-ந்தேதி நடக்கிறது.