பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் ‘இரவின் நிழல்’. இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘இரவின் நிழல்’ திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், எதிலும் தனிப்பாணி – அதுதான் இரா.பார்த்திபன்; ஒத்த செருப்பு படத்துக்குப் பிறகு ஒத்த ஷாட் படம்; இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம். பின்நவீனத்துவ ஒரே ஷார்ட் படத்தின் மூலம், தான் ஒரு டெக்னாலஜி சீனியர் எனக் காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.