Tamilசெய்திகள்

பாராளுமன்ற தேர்தல் பணியில் தீவிரம் காட்டும் ராகுல் காந்தி!

நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று 3 மாநிலங்களில் ஆட்சி அமைத்தது. இதனால் உற்சாகம் அடைந்த காங்கிரஸ் கட்சியினர் அடுத்து வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்கள்.

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ராகுல்காந்தியும் தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

கேரளாவில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் இங்கு கூடுதல் தொகுதிகளை கைப்பற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள்.

அதே நேரம் பாரதிய ஜனதா கட்சியும், கேரளாவில் வெற்றி கணக்கை தொடங்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பிரதமர் மோடி, பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா ஆகியோர் கேரளாவில் பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளனர்.

பாரதிய ஜனதாவிற்கு பதிலடி கொடுக்கவும், காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

இதில், கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி பங்கேற்க உள்ளார். இதனை கட்சியின் மாநில தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் பெண்கள் அமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கொச்சியில் நடக்கிறது. இதிலும் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசுகிறார்.

மேலும் கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இதில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி? என்பது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *