Tamilசெய்திகள்

பாராளுமன்ற தேர்தல்! – தமிழகத்தில் நான்குமுனை போட்டிக்கு வாய்ப்பு

தற்போதைய பாராளுமன்றத்தின் பதவி காலம் வருகிற மே மாதத்துடன் முடிவடைகிறது. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

ஆளும் பா.ஜனதாவும் எதிர்க்கட்சியான காங்கிரசும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே போட்டியிட முடிவு செய்துள்ளன. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தை பொறுத்த வரை அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் பிரதான கூட்டணியாக உருவாகி உள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகும் நிலையில் உள்ளது. தே.மு.தி.க, பா.ம.க, ஆகிய கட்சிகளையும் அ.தி. மு.க. கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

இதுதவிர ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, பாரிவேந்தரின் ஐ.ஜே.கே. கட்சி, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும் இந்த கூட்டணியில் இடம் பெறுகிறது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் சென்னையில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகளை இணைக்க முடிவாகி உள்ளது. அதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க இருக்கிறது. பா.ம.க. இருக்கும் அணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறாது என்று திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். எனவே தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர வாய்ப்பு இல்லை.

இதற்கிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், அ.தி.மு.க, பா.ஜனதா ஆகிய 2 கட்சிகளை நேரடியாக விமர்சித்து வந்தார். இதனால் அவர் தி.மு.க. பக்கம் சாய்வார் என்று கருதப்பட்டது. ஆனால் அவர் காங்கிரசுடன் சேர்ந்து தி.மு.க. அல்லாத கூட்டணியை உருவாக்கும் ரகசிய முயற்சியில் ஈடுபட்டார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தியுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். ஆனால் அவரது யோசனை ஏற்கப்படாததால் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்று கமல்ஹாசன் திடீர் என்று அறிவித்தார்.

மேலும் அ.தி.முக.வைப் போல் தி.மு.க.வும் அழுக்கு மூட்டை என்று கமல்ஹாசன் விமர்சித்தார். இது தி.மு.க.வுக்கு கடும்கோபத்தை ஏற்படுத்தியது. கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தி.மு.க.வும் நடிகர் சந்திரசேகர் மூலம் கடுமையாக தாக்கி அறிக்கை வெளியிட்டது. இதனால் கமல்ஹாசன் தனியாக ஒரு அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு ஆம்ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. சமீபகாலமாக சுயேச்சையாக அரசியலை விமர்சித்துவரும் நடிகர் பிரகாஷ்ராஜும் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தி.மு.க.வுடன் சேரும் முடிவில் இருப்பதால் கமல்ஹாசன் தனித்தே 3வது அணியாக களம் இறங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் அ.ம.மு.க. கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். ஆர்.கே. நகரில் பணபலத்தால் அவர் வெற்றிபெற்றதாக கமல்ஹாசன் விமர்சித்தார். இதனால் கமல்ஹாசனும், தினகரனும் சேரும் வாய்ப்பு இல்லை. தினகரன் தற்போது தமிழ் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.

இவரை கூட்டணி தொடர்பாக எந்த கட்சியும் அழைக்காத நிலையில் தனியாக களத்தில் நிற்கிறார். தினகரனுக்கு தி.மு.க., அ.தி.மு.க. போல் கூட்டம் அதிகம் வருவதால் அந்த தைரியத்துடன் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்.

தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 4 முனை போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை. கூட்டணி பேச்சு வார்த்தைகள் ஆரம்பகட்ட நிலையில் தான் தீவிரமாக இருக்கிறது.

எனவே அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கமல்ஹாசனுக்கும் தி.மு.க.வுக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் அவருக்கு காங்கிரஸ் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. கமல்ஹாசனுக்கும் , தி.மு.க.வுக்கும் இடையே சமரச முயற்சியாகவே காங்கிரசின் அழைப்பை எடுத்துக் கொள்ளலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *