Tamilவிளையாட்டு

பாகிஸ்தான் வீரர்களுக்கு கேப்டன் சர்ப்ராஸ் அகமது எச்சரிக்கை

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவிடம் ‘சரண்’ அடைந்ததால் பாகிஸ்தான் அணி கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும்.

இந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது, சக வீரர்களை கடுமையான வார்த்தைகளால் எச்சரித்து இருக்கிறார். ‘தொடர்ந்து இதே போன்று திறமைக்கும் குறைவாக மோசமாக விளையாடினால், நிச்சயம் தனியாக (பாதுகாப்பின்றி) நாடு திரும்ப முடியாது. மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதை மனதில் வைத்து விளையாடுங்கள். கசப்பான அனுபவத்தை மறந்து விட்டு, இனி வரும் ஆட்டங்களில் அணியை தூக்கி நிறுத்துவதில் கவனம் செலுத்துங்கள்’ என்று சர்ப்ராஸ் அகமது கூறியுள்ளார்.

இதற்கிடையே பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமிஸ் ராஜா அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியாவுக்கு எதிரான தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணியின் உலக கோப்பை கனவு ஏறக்குறைய முடிந்து போய் விட்டது. எஞ்சிய 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் அரையிறுதியை எட்டுவது கடினம் தான். ஏனெனில் பாகிஸ்தான் அணி ரன்ரேட்டில் மிகவும் பின்தங்கி இருக்கிறது. இரண்டு 38 வயது வீரர்களை (சோயிப் மாலிக் மற்றும் முகமது ஹபீஸ்) வைத்து கொண்டு உலக கோப்பையை ஒரு போதும் வெல்ல முடியாது. பாகிஸ்தான் அணியை முற்றிலும் சீரமைக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக நினைக்கிறேன். சில மூத்த வீரர்களை நீக்கி விட்டு இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *