பாகிஸ்தான் சென்று விளையாடுவதை உறுதிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி!

பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தான் சென்று முன்னணி அணிகள் விளையாட மறுப்பு தெரிவித்து வந்தன. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் அதிதீவிர முயற்சியால்  வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் செல்ல ஆரம்பித்தனர். வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், தென்ஆப்பிரிக்கா அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடின.

கடந்த வருடம் இறுதியில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் பாகிஸ்தானில் விளையாடுவதாக இருந்தது. நியூசிலாந்து போட்டி தொடங்குவதற்கு சற்றுமுன் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தொடரை ரத்து செய்தது. அதன்பின் இங்கிலாந்து அணியும் தொடரை ரத்து செய்தது.

இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. பல கட்டங்களாக பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய ஆஸ்திரேலிய அதிகாரிகள் பாகிஸ்தான் சென்றனர். அவர்கள் பாதுகாப்பு குறித்து திருப்தி தெரிவிக்க ஆஸ்திரேலியா பாகிஸ்தான் செல்ல முடிவு செய்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியா சம்மதம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஆஸ்திரேலியா பாகிஸ்தான் சென்று மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போடடி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் ராவல் பிண்டியில் மார்ச் 4-ந்தேதியும், 2-வது டெஸ்ட் கராச்சியில் 12-ந்தேதியும், 3-வது டெஸ்ட் லாகூரில் 21-ந்தேதியும் தொடங்குகிறது.

ஒருநாள் போட்டிகள் ராவல் பிண்டியில் நடைபெறுகின்றன. முதல் ஒருநாள் போட்டி மார்ச் 29-ந்தேதியும், 2-வது ஒருநாள் போட்டி மார்ச் 31-ந்தேதியும், 3-வது ஒருநாள் போட்டி ராவல் பிண்டியில் ஏப்ரல் 2-ந்தேதியும், ஒரேயொரு டி20 ஏப்ரல் 5-ந்தேதி ராவல் பிண்டியிலும் நடக்கிறது.