பாகிஸ்தானுக்கு எதிரான 2 வது டெஸ்ட் – வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 280 ரன்கள் இலக்கு

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பவாத் ஆலம் 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் பாபர் அசாம் அரை சதமடித்து 75 ரன்னில் அவுட்டானார். பஹீம் அஷ்ரப் 26 ரன்னிலும், ரிஸ்வான் 31 ரன்னிலும் அவுட்டாகினர்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 3 விக்கெட், சீலஸ் 3 விக்கெட்டும், ஹோல்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். 3-ம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. பானர் 18 ரன்னுடனும், அல்ஜாரி ஜோசப் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், நான்காம் ஆட்டம் நடைபெற்றது. தொடக்கம் முதலே பாகிஸ்தான் அணியினர் சிறப்பாக பந்து வீசினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறினர்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் அதிகபட்சமாக பானர் 37 ரன்னும், பிளாக்வுட் 33 ரன்னும், ஹோல்டர் 26 ரன்னும் எடுத்தனர்.

பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 6 விக்கெட்டும், மொகமது அப்பாஸ் 3 விக்கெட்டும், பஹீம் அஷ்ரப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 152 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. ஆரம்பம் முதல் பாகிஸ்தான் வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் ரன் வேகம் அதிகரித்தது.

அணியின் எண்ணிக்கை 70 ஆக இருக்கும்போது தொடக்க ஆட்டக்காரர் அபித் அலி 27 ரன்னில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து இம்ரான் பட் 37 ரன்னில் வெளியேறினார்.  அசார் அலி 22 ரன்னும், ஹசன் அலி 17 ரன்னும், பஹீம் அஷ்ரப் 9 ரன்னும், பாபர் அசாம் 33 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஹோல்டர் தலா 2 விக்கெட்டும், பிராத்வெயிட், கைல் மேயர்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பிராத்வெயிட், கிரண் பாவெல் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் எண்ணிக்கை 39 ஆக இருக்கும்போது பாவெல் 23 ரன்னில் அவுட்டானார்.

நான்காம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வெயிட் 17 ரன்னும், அல்ஜாரி ஜோசப் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இறுதி நாளில் 280 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.