Tamilவிளையாட்டு

பாகிஸ்தானின் இளம் வீரர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர் – வக்கார் யூனிஸ் மகிழ்ச்சி

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. பாகிஸ்தான் அணியில் 16 வயதேயான இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா இடம் பிடித்துள்ளார். இவருடன் 19 வயதான முசா கான், ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மேலும் மூத்த வீரர் இம்ரான் கான் இடம் பிடித்துள்ளார்.

இளம் வீரர்களை வைத்துக் கொண்டு பாகிஸ்தான் எப்படி விளையாட போகிறது என்ற விமர்சனம் எழும்பியது. ஆனால், ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு அபாரமாக இருந்தது.

இம்ரான் கான் ஐந்து விக்கெட் வீழ்த்தினார். நசீம் ஷா வீசிய ஒரு ஸ்பெல் அனைவரையும் ஈர்த்தது. கவாஜாவை திக்குமுக்காடச் செய்து அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.

இளம் வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசியது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது என பாகிஸ்தான் அணியின் பவுலிங் கோச் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வக்கார் யூனிஸ் கூறுகையில் ‘‘பயிற்சி ஆட்டத்தில் இளம் வீரர்கள் விளையாடியதை பார்க்கும்போது, நாங்கள் அப்பாவியாக இங்கு வரவில்லை. எங்களது வேலையை மிகவும் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று உணர்கிறோம்.

எங்களது பந்து வீச்சாளர்கள் ஜோ பேர்ன்ஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்கஸ் ஹாரிஸ், பான்கிராப்ட் ஆகியோரை வீழ்த்தி 122 ரன்னில் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியை சுருட்டியுள்ளனர். இந்த பேட்ஸ்மேன்கள் எல்லாம் ஆஸ்திரேலிய அணியில் விளையாடியவர்கள். அல்லது வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருப்பவர்கள்.

அவர்கள் விரைவில் அவுட்டாக்கியது நாங்கள் இங்கே சரியான போட்டியாளராக வந்துள்ளோம் என்ற மிகவும் சந்தோசமான தகவலை எங்களுக்கு கொடுத்துள்ளது. நாங்கள் வெற்றி பெறவும், ஆஸ்திரேலிய அணிக்கு சவாலாக இருக்கவும் விரும்புகிறோம். ஆகவே, எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது.

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு யுனிட்டை பார்த்து பாகிஸ்தான் வீரர்கள் அச்சப்படுவார்கள் அல்லது கவலையடைவார்கள் என்று நினைக்கவில்லை’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *