பயிற்சி முகாம் நன்றாக தொடங்கியது – ஆர்சிபி கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சி

8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய 3 இடங்களில் வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. போட்டி அட்டவணை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும் தொடக்ககட்ட ஆட்டங்கள் துபாயில் நடைபெறும் என்று தெரிகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2 வீரர்கள், உதவியாளர், வலை பயிற்சி பவுலர்கள் என்று மொத்தம் 13 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களை தவிர்த்து எஞ்சிய 7 அணி வீரர்களும் 6 நாள் தனிமைப்படுத்தும் நாட்கள் முடிந்து பயிற்சியை தொடங்கி விட்டனர்.

சக வீரர்களுடன் இணைந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு பயிற்சியில் ஈடுபட்ட அனுபவம் குறித்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘5 மாதங்களுக்கு பிறகு இப்போது தான் பேட்டை எடுத்துள்ளேன். வலை பயிற்சியில் பேட்டைப்பிடித்து முதல்முறையாக பந்தை எதிர்கொண்ட போது, கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. ஆனாலும் எதிர்பார்த்ததை விட முதலாவது வலைபயிற்சி சிறப்பாகவே இருந்தது. ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டதால் வலுவான உடல்தகுதியுடன் இருப்பதாகவே உணர்கிறேன். இதனால் இன்றைய பயிற்சியின் போது பெரிய அளவில் சிரமம் ஏதும் இல்லை. நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட முடிந்தது. முறையான உடற்பயிற்சி இல்லாமல் வந்திருந்தால் உடலை எளிதாக அசைத்து ஆடுவது கடினமாக இருந்திருக்கும். யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் நதீம் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் முதல் நாளில் நன்றாக பந்து வீசினர். பந்தை சரியான பகுதியில் ‘பிட்ச்’ செய்து நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட்டனர். ஒட்டுமொத்தத்தில் எங்களது பயிற்சி முகாம் நன்றாக தொடங்கியிருக்கிறது’ என்றார்.