பத்ரா சால் வழக்கி கைதான சஞ்சய் ராவத்!

சிவசேனாவின் குரலாக கருதப்படும் சஞ்சய் ராவத் எம்.பி. பத்ரா சால் வழக்கில் சிக்கியது பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. பத்ரா சால் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை கைது செய்து உள்ளது.

பத்ரா சால் மோசடி என்றால் என்ன?. இதில் சஞ்சய் ராவத் சிக்கியது எப்படி? என்பது பற்றிய விவரம் வருமாறு:-

மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ளது சித்தார்த் நகர். இது பத்ரா சால் என பரவலாக அழைக்கப்படுகிறது. இங்கு சுமார் 47 ஏக்கர் பரப்பில் 672 குடும்பங்கள் குடிசை வீடுகளில் வசித்து வந்தனர். 2007-ம் ஆண்டு பத்ரா சாலை சீரமைக்க மகாடா நிறுவனம், எச்.டி.ஐ.எல். நிறுவனத்தின் கிளை நிறுவனமான குரு ஆஷிசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் எச்.டி.ஐ.எல். நிறுவனத்திற்கு கிடைக்க தொழில் அதிபர் பிரவின் ராவத் உதவி செய்தார். பிரவின் ராவத், சஞ்சய் ராவத்திற்கு நெருக்கமானவர் ஆவார். குரு ஆஷிஸ் நிறுவனத்தின் இயக்குனர்களாக ராகேஷ் வாதவன், சாரங் வாதவன் மற்றும் பிரவின் ராவத் இருந்தனர்.

மகாடா குரு ஆஷிஸ் நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தின்படி அவர்கள் முதலில் குடிசைப்பகுதியில் வசித்த 672 குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும். மீதமுள்ள இடத்தின் ஒரு பகுதியில் மகாடாவுக்கு 3 ஆயிரம் வீடும், 2.8 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் வீடு கட்டி விற்பனை செய்யலாம். ஆனால் குரு ஆஷிஸ் நிறுவனம் குடிசைப்பகுதி மக்களுக்கு வீடு கட்டாமல், முதலில் விற்பனை செய்வதற்காக அடுக்குமாடி கட்டிட பணிகளை தொடங்கியுள்ளது. மேலும் வீடு கட்டி தருவதாக கூறி பலரிடம் ரூ.138 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அந்த நிறுவனம் மகாடா கொடுத்த நிலத்தை முறைகேடாக பல்வேறு கட்டுமான அதிபர்களுக்கு ரூ.1,034 கோடிக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் பத்ரா சால் குடிசைப்பகுதி மக்களுக்கும் வீடு கட்டி கொடுக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக பத்ரா சால் வழக்கில் ரூ.1,200 கோடி வரை முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் பத்ரா சால் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை பிரவின் ராவத்தை கைது செய்தது. விசாரணையில் அவர் 2008 முதல் 2010-ம் ஆண்டு வரை எச்.டி.ஐ.எல். நிறுவனத்திடம் இருந்து ரூ.112 கோடியை பெற்றது தெரியவந்தது. இந்த பணத்தை பிரவின் ராவத் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டவர்களுக்கும் கொடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக 2010-ம் ஆண்டு பிரவின் ராவத்தின் மனைவி மாதுரி, சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவுக்கு ரூ.83 லட்சம் வட்டியில்லா கடனாக கொடுத்து இருக்கிறார். இந்த பணத்தில் வர்ஷா தாதரில் வீடு ஒன்றை வாங்கி உள்ளார்.

இதேபோல மோசடி மூலம் கிடைத்த பணத்தில் மாதுரி ராவத், வர்ஷா ராவத், தொழில் அதிபர் சுஜித் பட்கரின் முன்னாள் மனைவி சுவப்னா பட்கா் ஆகியோர் பெயர்களில் அலிபாக், கிம் கடற்கரையில் 8 பிளாட் நிலம் வாங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறை தாதரில் உள்ள வர்ஷா ராவத்தின் வீடு, அலிபாக்கில் உள்ள நிலம் என ரூ.11 கோடி சொத்துக்களை முடக்கியது. இந்தநிலையில் தான் இந்த வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத்திடமும் அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. மேலும் அவர் பத்ரா சால் மோசடி வழக்கில் நேற்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சஞ்சய் ராவத் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியராக உள்ளார். அவரது எழுத்துக்கள் சிவசேனா தொண்டர்களை கவரும் வகையில் ஆவேசமாக இருக்கும். சிவசேனாவின் குரலாகவே கருதப்படும் இவர் முறைகேடு வழக்கில் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.