Tamilவிளையாட்டு

நேபாள் அணி கூட பாபர் அசாமை சேர்க்காது – முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் காட்டம்

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகி சர்மா தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

அதேசமயம் இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் என கணிக்கப்பட்ட அணிகளில் ஒன்றான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி மீதும் அந்த அணி கேப்டன் பாபர் அசாம் மீதும் கடுமையான விமர்சங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் நேபாள் அணி கூட அவர்களது பிளேயிங் லெவனில் பாபர் அசாமை சேர்க்காது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் மாலிக் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

எங்கள் அணியின் சிறந்த வீரர் யார்? என கேட்டால், பாபர் அசாம் என்று தான் கூறுவோம். ஆனால் குறிப்பிட்ட வடிவத்தில் நான் முதல் 4-5 அணிகளைப் பற்றி பேசுகிறேன். ஏனெனில் அந்த அணிகளின் விளையாடும் லெவனில் பாபர் அசாம் இடம் இருக்குமா? அதிலும் டி20 வடிவத்தில் ஆஸ்திரேலியா, இந்தியா அல்லது இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் பாபர் அசாம் இருப்பாரா? என்று கேட்டால் என்னுடைய பதில் இல்லை என்பது மட்டும் தான்.

என்னைக்கேட்டால் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் நேபாள் அணி கூட அவர்களது பிளேயிங் லெவனில் பாபர் அசாமை சேர்க்காது.

இவ்வாறு மாலிக் கூறினார்.