நெமிலிச்சேரி 6 வழித்தட சாலையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தும், பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, ஆவடி மற்றும் பொன்னேரி வட்டங்களுக்கு உட்பட்ட சென்னை வெளிவட்டச்சாலையின் 2-ம் கட்டமாக ரூ.1,025 கோடி மதிப்பீட்டில் நெமிலிச்சேரி தேசிய நெடுஞ்சாலை முதல் பாடியநல்லூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக திருவொற்றியூர் – பொன்னேரி – பஞ்செட்டி சாலையில் உள்ள மீஞ்சூர் வரையில் 30½ கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள 6 வழித்தட பிரதான சாலையை முதல்-அமைச்சர் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலிக்காட்சி மூலமாக நேற்று திறந்து வைத்தார்.

மேலும், நெடுஞ்சாலைத்துறையில் 2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுகளுக்கான 94 தட்டச்சர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு அமைச்சுப்பணி தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பேருக்கு பணிநியமன ஆணைகளையும் முதல்-அமைச்சர் வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.