நெதர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி – இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 49.2 ஓவரில் 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

கேப்டன் எட்வர்ட்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 64 ரன்னில் ஆட்டமிழந்தார். பாஸ் டி லீட் 56 ரன்னில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் மேக்ஸ் ஒடோவ் அரை சதமடித்து 50 ரன்னில் வெளியேறினார். இங்கிலாந்து சார்பில் டேவிட் வில்லே 4 விக்கெட்டும், பிரிடன் கார்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தி அணியின் வெற்றிக்கு உதவினார். பிலிப் சால்ட் 49 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இங்கிலாந்து 30.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. ஜேசன் ராய் 101 ரன்னும், ஜோஸ் பட்லர் 86 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றியது.