நெடுஞ்சாலைகளில் காரி செல்பவர்களை குறி வைத்து கொள்ளை – பிடிபட்டவர்களிடம் 260 சவரன் நகைகள் மீற்பு

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 35). மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் கடந்த 9-ந் தேதி சென்னையில் இருந்து சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்துக்கு டெம்போ வேனில்
சென்றார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பனையபுரம் என்ற இடத்தில் நள்ளிரவில் வேனை நிறுத்திவிட்டு அனைவரும் டீ குடித்தனர். பின்னர் அதிகாலை 2 மணி அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சின்னகுப்பம் என்ற இடத்தின் அருகில் டீ குடிக்க
வேனை நிறுத்திவிட்டு பார்த்தபோது, வேன் மீது வைத்திருந்த நகை பெட்டி உள்பட 4 பெட்டிகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. அந்த நகை பெட்டியில் 260 பவுன் நகை இருந்தது.

நகை கொள்ளை போனதால் அதிர்ச்சியடைந்த பெரியசாமி திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி. மகேஷ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள், சிறப்பு
சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் நகை பெட்டி மாயமான இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொள்ளை சம்பவத்தில் மதுரையை சேர்ந்த சிலர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் மதுரைக்கு சென்று வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த வினோத் கண்ணன் (31), முட்டி கணேசன் (49) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 260 பவுன் நகை பெட்டிகளை கொள்ளையடித்ததை 2 பேரும் ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து 62 பவுன் நகைகள், அவர்கள் பயன்படுத்திய மினிடெம்போ, கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட 2 பேரும் போலீசாரிடம் அளித்து உள்ள வாக்குமூலம் வருமாறு:-

நாங்கள் 9 பேர் சேர்ந்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலைகளில் காரில் சுற்றிவந்து பணம், நகை கொண்டு செல்பவர்களை நோட்டமிடுவோம். சம்பவத்தன்று இதைபோல பெரியசாமி குடும்பத்தினர் சென்ற வாகனத்தை பின்தொடர்ந்தோம். அவர்கள் டீ
குடிக்க வேனை நிறுத்தினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நகை பெட்டியுடன் 260 பவுன் நகையை திருடினோம். கொள்ளையடித்த நகைகளை 9 பேரும் பிரித்துக்கொண்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கைதான 2 பேரிடம் இருந்து 62 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள 7 பேரை பிடித்தால்தான் மீதமுள்ள நகைகளை பறிமுதல் செய்யமுடியும். எனவே அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.